பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான சவால்களுக்கு முகம்கொடுத்தபடியே வாழ்க்கையில் போராடி வெற்றிபெற்ற பெண்களைக் கௌரவப்படுத்தும் வகையில்; ஃபிரீடா கொரயா விருதுகளுக்கான போட்டியை கடந்த வருடம் (2023) காமனி கொரயா நிதியம் ஒழுங்கு செய்திருந்தது.
விளையாட்டுத்துறை, கல்வித்துறை மற்றும் தொழில் முயற்சிகளில், சவால்களை வென்று தமது குடும்ப வறுமையை புறந்தள்ளி வாழவில் வெற்றிபெற்ற பெண்களைக் கௌரவப்படுத்துவதும் அவர்களை மேலும் சக்தி கொண்டவர்களாக மாற்றுவதும் இதன் பிரதான இலக்காக இருந்தது.
இந்தப் பரிசுப் போட்டி தொடர்பான எமது விளம்பர அறிவித்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் நாடு முழுவதுமிருந்து ஆண், பெண் எழுத்தாளர்களில் இருநூறுக்கும் மேற்பட்டோர் தமது விண்ணப்பங்களை எமக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்களை கூர்மையாகப் பரிசீலித்து பின்னர் அவற்றில் இருந்து 70 பொருத்தமான எழுத்தாளர்களைத் தெரிவு செய்தோம். அவர்களுக்கு காமனி கொரயா நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட தகவல் சேகரிப்புப் படிவங்கள் அனுப்பி வைக்கப்படடன. தைரியசாலிகளான பெண்களை அடையாளம் கண்டு அவர்களைப் பற்றிய கட்டுரைகளை எமக்கு எழுதி அனுப்பும்படி எழுத்தாளர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. நாட்டின் எல்லா பாகங்களையும் உள்ளடக்கியதாக பொருத்தமான கட்டுரைகள் பூரணமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டு எமது விசேட குழுவினரால் 44 சாதனைப் பெண்கள் மற்றும் எழுத்தாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களை கௌரவிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டன.
எமக்குக் கிடைத்த தகவல் சேகரிப்புப் படிவங்கள் மற்றும் சாதனைப் பெண்கள் பற்றிய கட்டுரைகளை ஆராய்ந்தபோது இந்நாட்டின் கிராமங்களிலும் நகரப் புறங்களிலும் வாழும் குடும்பங்களில் காணப்படும், சமூக, பொருளாதார மற்றும் கலாசார பிணக்குகளின் தன்மைகளை எம்மால் உணர முடிந்தது.
இப் பிணக்குகளை எல்லாம் சமாளித்துத் தாண்டி வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பெண்கள் இதன்பொருட்டு கையாண்ட உபாயங்கள் மற்றும் வழிமுறைகள் தொடர்பாக சமூக மட்டத்தில் ஒரு உரையாடலை ஏற்படுத்துவது அவசியம் என்பது புலப்பட்டது.
இந்நாட்டிலிருந்து வறுமையை ஒழித்துக் கட்டுவதற்கான கொள்கை வகுப்பில் ஃபிரிடா கொரயா விருது போட்டியூடாக எம்மால் திரட்டப்பட்ட சமூக மற்றும் பொருளாதார தரவுகள் உதவக் கூடியதாக அமையும் என்பது நிச்சயம்.